குப்பை கொட்டும் இடமாக மாறிய ஆங்கிலோ இந்தியன் ரயில்வே கட்டிடம் : பாதுகாக்க கோரிக்கை

0 127
udhay

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே கட்டிடங்கள் இன்றளவும் பலம் வாய்ந்ததாக இருக்கின்றன. அந்த வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் 1897-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்காக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு அந்த சமூகத்தினர் சார்ந்த கலாச்சார விழாக்கள், திருமண நிகழ்வுகள், குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் நிகழ்ச்சிகளை நடத்தும் அந்த சமூகத்தினர் தென்னக ரயில்வேக்கு வாடகை செலுத்தி வந்தனர். தற்போது அந்த கட்டிடத்தை சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் ரயில்வே தொழிலாளர்களின் குப்பை கொட்டும் இடமாகவும் அந்த கட்டிடம் மாறி இருப்பதாக ஆங்கிலோ இந்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கட்டிடத்தினை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என ஆங்கிலோ இந்தியர்கள் ரயில்வே அமைச்சகம் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பாக அங்கு வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண் ஒருவர் கூறுகையில், இந்த கட்டிடத்தில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கின்றோம். ஆனால் இப்போது ரயில்வே தொழிலாளர்கள் குப்பைகளை கொட்டி வருவதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பராமரிப்பு இன்மையால் அந்த பழமையான கட்டடத்தின் புனிதம் கெட்டு விட்டது என வேதனை தெரிவித்தார். ஆங்கிலோ இந்தியன் கூட்டமைப்பின் துணைத் தலைவர் அகஸ்டின் ராய் ரோசரியோ கூறும்போது, எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 1987-லிருந்து அந்த கட்டிடம் பராமரிக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. எங்கள் வரலாற்றைச் சொல்லும் பழமையான கட்டிடமாக இருப்பதால் அதனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் பழமையான பல கட்டிடங்களை அதன் பழமை மாறாமல் புதுப்பித்து வருகின்றனர். அதேபோன்று இந்த ஆங்கிலோ இந்தியன் ரயில்வே கட்டிடத்தையும் புணரமைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

trichymail

Leave A Reply

Your email address will not be published.