தொல்லியல்துறை நினைவுச் சின்னங்களை போற்றுதல், பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல்துறை நினைவுச் சின்னங்களை போற்றுதல், பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19ந் தேதி முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் திருச்சி தொல்லியல் அலுவலர் சாய் பிரியா தலைமையில் 23ந் தேதியான நேற்று திருவெள்ளரையில் உள்ள தந்திவர்ம பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தொல்லியல் நினைவுச் சின்னமான “ஸ்வஸ்திக் கிணற்றை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு தொல்லியல் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் திருவெள்ளரை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தொல்லியல் துறை அலுவலர் சாய்பிரியா தமிழ்நாட்டின் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட தமிழரின் தொல் பழங்கால கண்டுபிடிப்புகள் குறித்து பிபிடி மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொல்லியல்துறை இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு மாணவி ஆனந்தப்பிரியா, திருச்சி மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் சரவணன்வேல் மற்றும் ஆசிரியர்கள், திருவள்ளரை ஊராட்சி மன்றத் தலைவி லதா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக தொல்லியல் துறை உதவி பொறியாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.