காவிரி ஆற்றில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் காவிரி ஆற்றில் முள் செடியில் சிக்கிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதியினர் ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆரோக்கியசாமி, மணிகண்டன், கமல் சிங், செல்வம், கணேசன், சுபாஷ், சந்திரபோஸ், ஆகியோர் சடலத்தை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது தண்ணீரில் அடித்து வரப்பட்டரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.