முசிறி பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; சோதனையில் ஏமாற்றம் அடைந்த போலீஸ்

0 674
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறியில் நகர பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகியவைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்ட சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின் பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி, பயிற்சி டி.எஸ்.பி. விக்னேஸ்வரன் மற்றும் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர்கள், சப் – இன்ஸ்பெக்டர்கள் முத்தையன், லோகேஸ்வரன், மோப்பநாய் ரூபி மற்றும் அதிநவீன கருவிகளுடன் அவசரகால நிலையை கடைபிடித்து பஸ் நிலைய வளாகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பஸ் நிலையத்திற்குள் பேருந்துகள் மற்றும் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பஸ் நிலையத்திற்குள் இயங்கி கொண்டிருந்த அனைத்து வியாபார கடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக மூடப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் பஸ் நிலைய வளாகம் முழுவதும் சோதனை செய்தபோதும் எந்தவிதமான தடயங்களும், வெடிகுண்டு பொருட்களும் கைப்பற்றப் படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய மர்மநபரின் செல்போன் டவர் இடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.