வீட்டின் பூட்டை உடைத்து 130 பவுன் நகைகள் கொள்ளை

0 286
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள பெரகம்பி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரும் இவரது மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அன்பழகனின் மனைவி லதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லதா சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை லதா வீட்டின் முன்பக்க கிரில் கேட் திறந்து இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர் சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டார் என்று நினைத்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும், அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதைக் கண்டு லதாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சென்னை சென்றிருந்த லதா வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 130 பவுன் நகை திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதை தொடர்ந்து சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கை ரேகைகளை ஆய்வு செய்தனர்.
மேலும் இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தார். மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.