முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையை உடைப்பு-மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு..
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெட்டி மாங்குடி கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவ சிலையை மீண்டும் உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள். மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவச் சிலை கடந்த 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ந்தேதி அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த மாதம் 22 ந்தேதி சமூகவிரோதிகள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலை மீது சாணியை பூசி விட்டு சென்றனர். இச்சம்பவத்தை அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எம்ஜிஆர் திருஉருவ சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள மீது சிறுகனூர் காவல் நிலையத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்திய எம்ஜிஆர் சிலையை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் அமைத்தனர். இந்நிலையில் அந்த சிலையை சமூக விரோதிகள் சிலர் மீண்டும் எம்ஜிஆரின் திருஉருவ சிலையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். இதனை அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் அதிமுகவின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட போலீசார் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இதில் சமூக விரோதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ரெட்டிமாங்குடிக்கு நேரில் வந்து உடைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினார்.