திருச்சி மேலகல்கண்டார் கோட்டை தெய்வீகன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 29). இவர் கடந்த 26-1-2018 அன்று இரவு வீட்டை உபயோக பொருட்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். கோரையாற்று பாலம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவின் பின்னால் அமர்ந்து இருந்த நாகராஜன் தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், தனியார் பஸ் டிரைவர் இஸ்ரவேல்(34) மீது திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட தனியார் பஸ் டிரைவர் இஸ்ரவேலுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் ஹேமந்த் ஆஜரானார்.