திருச்சி மாவட்டம் திருவெறும்பூரையடுத்த காட்டூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சூரிய பாண்டி என்கின்ற சாராயபாண்டி(வயது 35). இவர் மீது திருப்பூர், திருச்சி, பூதலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை என சுமார் 40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 29-9-2021 அன்று காட்டூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு திருவெறும்பூர் போலீசாரால் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆணைக்கிணங்க சாராய பாண்டி குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.