செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழா!
திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மன் சிலை மீது ஊற்றினர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் செய்யப்பட்ட கூல், நீர், மோர், பானகம், இளநீர் ஆகியவை படையல் இடப்பட்டது. அப்போது மாரியம்மன், வீரமலையாண்டி, உக்ராண்டி, சடாமுனி, மதுரைவீரன் உள்ளிட்ட
தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன. அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகளிலிருந்து பொதுமக்கள் விடுபடவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. சாமியாடிகள் அருள்வாக்கிற்கு பின்னர் பக்தர்களுக்கு கூல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.