வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 14-ந் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் தரிசனம் செய்ய வருவார்கள்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் முத்தரசு, சக்திவேல், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் கோவிலில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் ரங்கா, ரங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், கருடாழ்வார் சன்னதி, ஆரியபட்டா வாசல், கொடிமரம், துரை பிரகாரம், அர்ஜுன மண்டபம், கிளிமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், பரமபத வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி உள்பட கோவில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.