மணப்பாறை நகர்மன்ற உறுப்பினர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார்

0 405
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் 1 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்லம்மாள் வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அதிமுகவில் 11 பேரும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் 11 பேரும் வெற்றி பெற்றனர். இதே போல் சுயேட்சையாக போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். சுயேட்சை கவுன்சிலர்கள் 5 பேரும் திமுக விற்கு ஆதரவு தெரிவித்ததால் திமுகவே நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்; அதிமுகவைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் என்பவர் வெற்றி பெற்று நகர்மன்ற தலைவராக தேர்வானார். மணப்பாறை நகராட்சி வரலாற்றில் முதல் முறையாக அதிமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று நகர்மன்ற தலைவரானார். இந்நிலையில் 2 முறை நடைபெற்ற நகர்மன்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கேற்காததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நகர் மன்ற கூட்டமும் நடைபெறாததால் அதிமுக நகர்மன்ற தலைவர் மதுரை உயர் நிதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நகர் மன்ற கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாளை முதல் நகர்மன்ற கூட்டமும் நடைபெற உள்ளது. நீதிமன்ற உத்தரவுப் படி காலையில் நகர்மன்ற கூட்டம் நடைபெறும் நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி மதியம் நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இரண்டுமே மணப்பாறை நகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் 1 வது வார்டைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் செல்லம்மாள் இன்று காலை வீட்டில் இருந்தவரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் தி.மு.க வினர் திரண்டு கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் வலியுறுத்தினர். இதுஒருபுறம் இருக்க தன் தாயை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்ட 10 பேர் கடத்திச் சென்றதாக கடத்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினரின் மகன் பிரபு மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகர், நகர செயலாளர் பவுன்ராமமூர்த்தி, நகர்மன்ற கவுன்சிலர் எத்திராஜ், நகர்மன்ற தலைவரின் கணவர் பாஸ்கரன் உள்ளிட்ட 10 பேர் மீது மணப்பாறை போலீசார் கடத்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தப்பட்ட செல்லம்மாள் அதிமுகவில் இருந்த நிலையில் பின்னர் தி.மு.கவிற்கு சென்றதாகவும், அதன் பின் அதிமுகவிற்கே வந்து விட்டதாகவும் மாறி மாறி கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்படும் செல்லம்மாள் தன்னை யாரும் கடத்தவில்லை. எனது கட்சி கூட்டத்திற்கு நான் வந்தேன், கூட்டம் முடிந்தவுடன் நாளை நான் வந்துவிடுவேன், எந்த பிரச்சினையும் இல்லை என கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இச்சம்பவத்திற்கிடையே நாளை நடைபெறும் நகர்மன்ற கூட்டம், மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.