உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு சலுகை!

0 283
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் “பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்” 2020-2021ம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வாயிலாக தமிழகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்கள் வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பபயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவுபதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம். நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். “ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்” என்ற அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு தோந்தெடுக்கப்பட்டுள்ள வாழை விளைபொருள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆகவே, மாவட்ட அளவில் ஏற்கனவே இயங்கி வரும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வாழை விளைபொருளை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக ஈடுபடவுள்ள தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) 0431&2422142 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.