திருச்சி மாவட்ட கோர்ட்டு வளாகத்தின் பின் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரியாக நாகை மாவட்டம் வெள்ளிபாளையம் சிவன்கோவில் மேல வீதியை சோ்ந்த சந்திரமோகன்(50) பணியாற்றி வருகிறார்.
இந்த அலுவலகத்தில் திருச்சி பாலக்கரை கீழபுதூர் தெருவை சேர்ந்த சந்திரசேகர்(40) என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் வேனில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் மாலை 6 மணி அளவில் டிரைவர் சந்திரசேகரிடம், வாகனத்தின் லாக்புக்கை கொண்டுவரும்படி சந்திரமோகன் கூறியுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த டிரைவர், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து, அதிகாரியின் தலையில் ஓங்கி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்த ஊழியர்கள் அதிகாரியின் அறைக்கு சென்று பார்த்த போது, அதிகாரியின் தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கிடந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அதிகாரி சந்திரமோகனை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் சந்திரசேகரை தேடி வருகிறார்கள்.