நெல் வயலில் படுத்திருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
திருச்சி மாவட்டம் துவரற்குறிச்சி அருகே உள்ள உசிலம்பட்டி களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். விவசாயியான இவர் தனது வயலில் நெல் நடவு செய்துள்ளார். நெற்கதிர் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது நெற்கதிர்களுக்கு நடுவே சுமார் 7 அடி நீலமுள்ள மலைப்பாம்பு ஒன்று வயிற்றுக்குள் எதையோ விழுங்கிய நிலையில் நகர முடியாமல் படுத்துக்கிடந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன் இது பற்றி துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் வயலில் கிடந்த மலைப்பாம்பை பாம்புபிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.