கொட்டப்பட்டு பகுதியில் குளங்கள் நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சூழ்ந்தது

0 495
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆவின் நிறுவன வளாகம் அருகே கொட்டப்பட்டு குளம் நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு திருச்சி, கே.கே.நகர், காஜாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீர் இந்த குளத்துக்கு வரும். இந்த குளம் நிரம்பினால் அந்த தண்ணீர் புதுக்கோட்டை சாலை பகுதியில் உள்ள மறுகால் வழியாக சாலையை கடந்து செல்லும்.
அந்த நீர் கொட்டப்பட்டு ஊருக்குள் மொராய்ஸ்கார்டன் ரன்வே நகர் பகுதியில் காளியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்துக்கு செல்லும். மேலும் விமான நிலைய பகுதியில் பெய்யும் மழைநீரும் இந்த குளத்துக்குதான் வந்தடைகிறது. இந்த குளம் நிரம்பினால், அதன் அருகே உள்ள வாய்க்கால் மூலமாக பொன்மலைப்பட்டி சென்று மாவடி குளத்தை சென்றடையும்.

முன்பு கொட்டப்பட்டு பகுதியில் பெரும்பாலன இடங்கள் விவசாய நிலங்களாக இருந்தன. இதனால் கொட்டப்பட்டு பெரிய குளம் நிரம்பினால் தண்ணீர் ஊருக்குள் உள்ள குளத்தில் நிரம்பி, மாவடி குளத்தை சென்றடைந்து வந்தது. ஆனால் தற்போது, இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விட்டன.
இதனால் விவசாய நிலங்களில் இருந்த வடிகால் மாயமானது. இதனால் தற்போது, இந்த பகுதியில் உள்ள இந்திராநகர், வெங்கடேஸ்வரா நகர், ஐஸ்வர்யா நகர், கோல்டன்நகர் மற்றும் அதன் விரிவாக்க பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலே அப்பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் புதுக்கோட்டை சாலையில் உள்ள கொட்டப்பட்டு குளம் மற்றும் மொராய்ஸ்கார்டன் பகுதியில் உள்ள குளம் ஆகியவை நிரம்பின. கொட்டப்பட்டு குளத்தின் வடிகால்கள் மாயமானதால், குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஜே.கே.நகர், ஆர்.எஸ்.புரம் பகுதிக்குள் புகுந்தது. குறிப்பாக ஜே.கே.நகரில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் 4 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இதுபோல் விமான நிலைய பகுதியில் பெய்த மழைநீர் மொராய்ஸ் கார்டன் பகுதியில் உள்ள குளத்துக்கு செல்லமுடியாததால் ஐஸ்வர்யா கார்டன், வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு காமன் மேடு பகுதியில் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.

மற்றொரு புறம் கொட்டப்பட்டு ஊருக்குள் மொராய்ஸ் கார்டன் பகுதியில் உள்ள குளம் நிரம்பி, கரையில் உள்ள காலி வீட்டு மனைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த குளத்திற்கு வடிகால் இருந்தும், அது தூர்ந்து விட்டதால் குளத்தின் தண்ணீர் அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் பகுதிக்குள் செல்லும் நிலை உருவாகி உள்ளது.
இந்தநிலையில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஜே.கே.நகர் பகுதி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் கொட்டப்பட்டு குளத்தில் உள்ள தண்ணீரை தற்காலிகமாக ராட்சத மின்மோட்டார் மூலம் உறிஞ்சி ஆவின் நிறுவ கழிவுநீர் செல்லும் குழாய் மூலம் சுப்பிரமணியபுரம் வழியாக சாக்கடை கால்வாயில் மாநகராட்சி நிர்வாகம் விட்டுவருகிறது. ஆனால் ஊருக்குள் உள்ள குளத்தின் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.