“பாதுகாப்பும் பண்டிகையும்” – திருச்சி அருகே அரசு பள்ளியில் விழிப்புணர்வு!
“பாதுகாப்பும் பண்டிகையும்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி தா.பேட்டை காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தா.பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிகுமார் கலந்து கொண்டு பேசுகையில்… “பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் கூடுவதால் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே தனிமனித பாதுகாப்பை உறுதி செய்வது நமது சமுதாய கடமையாகும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதும் மத்தாப்புகள் கொளுத்துவதும் நமது வழக்கமாக இருக்கிறது. பட்டாசு வெடிப்பது குறித்த முறையான வழிகாட்டுதல் இன்றியும் பாதுகாப்பு இல்லாமலும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிருக்கும் உடைமைக்கும் சேதம் ஏற்படக்கூடும். எனவே, அனைவரும் பாதுகாப்பாக பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் கீதா, ஆசிரியர் சித்ரா, ஆசிரியர் தண்டபாணி ஆசிரியர் நிர்மலா, மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.