தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அரசின் ஆதரவுடன் எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
திருச்சி கிளை அலுவலகத்தில் (முகவரி எண்: 33, 2-வது தளம், கே.ஆர்.டி. கட்டிடம், பிராமினேட் சாலை, கண்டோண்ட்மென்ட், திருச்சி – 620001) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் மூலதன மானியம், 6 சதவீத வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.