பூம்புகார் வரை செல்லும் காவிரித்தாய் ரதத்திற்கு ஸ்ரீரங்கத்தில் சிறப்பான வரவேற்பு
அகிலபாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதிநீரின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், நதி நீர் மாசுபடாமல் பாதுகாக்க வலியுறுத்தியும் சிறப்பு ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வகையில் 11ம் ஆண்டு ரதயாத்திரை குடகுமலையில் அகிலபாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. இந்த ரதயாத்திரை கடந்த 27-ந் தேதி ஒகனேக்கல் பகுதியில் தமிழக எல்லைப்பகுதிக்கு வந்தது. அங்கிருந்து காவிரிக்கரையோர புனித தீர்த்தத் தலங்களில் ரதத்தில் வரும் காவிரித்தாய் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, அந்தந்த பகுதிகளில் காவிரி ஆற்றுக்கு மகாஆரத்தி காட்டப்பட்டு வருகிறது.
இவ்வகையில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் புவனேஸ்வரி, உள்ளூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேளதாளம், வானவேடிக்கை முழங்க பூரணகும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசினிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மாமண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டுவழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதானந்த சரஸ்வதி, வித்யாம்பா சரஸ்வதி மாதாஜீ, அறங்காவலர் கண்ணன் உள்பட பல்வேறு ஆன்மிக சேவை அமைப்புகளைச் சேர்ந்த துறவிகள், துறவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வரும் 11-ந் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது.