கற்கால கருவிகள் சிறப்பு சொற்பொழிவு..
திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் கற்கால கருவிகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. புத்தூர் கிளை நூலக நூலகர் நாகராஜன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

வரலாற்றுத் துறை மாணவர் அரிஸ்டோ கற்கால கருவிகள் குறித்து பேசுகையில்
தமிழகத்தில் கற்காலம் என்பது சுமார் கி.மு. 15,10,000 தொடங்கி கி. மு 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகள், மேற்பரப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றின் காலங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்பட்டறைகளும், வாழ்விடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கற்காலத்தில் கைக்கோடரிகள், உளிகள், கத்திகள் மற்றும் சிறிய கற்கருவிகள் பயன்படுத்தியுள்ளனர். கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ள கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. மேலும் பண்டைய மக்களின் கல்திட்டைகள், கல்வட்டங்கள் முதலியன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கண்டுபிடிப்புகளினால், தமிழ்நாட்டில் பழைய கற்கால மக்கள் பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது.
பழைய கற்கால மக்கள் உணவைத்தேடி அலையும் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளனர். கற்கால கருவிகள் மூலம் கால நிலை மாறுபாட்டினையும் மனித வளர்ச்சி நிலையினையும் உணரலாம். பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம் குறித்து பல்வேறு நூல்கள் மூலம் அனைவரும் படித்து அறியலாம் என்றார். நாணயங்கள், பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் ரமேஷ், லட்சுமி நாராயணன், சந்திரசேகரன், முகமது சுபேர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.