இயற்கை காய்கறி விவசாயத்துக்கு மானியம் பெற தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம்

0 438
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மாடித்தோட்டம் வரவேற்பை பெற்று வருகிறது. இது நஞ்சில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் உற்பத்திக்கு பயனாக உள்ளது. மாடித்தோட்டத்துக்கு மண்புழு உரத்தின் தேவை அதிகரித்து வருவதுடன், இயற்கை விவசாய நிலத்துக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.

இது படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வரபிரசாதம் ஆகும். இயற்கை உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது மண்ணின் அமிலகார நிலை வளர்ச்சிக்கு உகந்ததாகவும், மண்ணின் கட்டமைப்பு என்று சொல்லக்கூடிய இயற்பியல் தன்மையாகிய மண்துகள்களின் அமைப்பினால் காற்றோட்டம், வடிகால் வளம், ஈரம் காக்கும் தன்மை ஆகியன உண்டாகிறது.

ஒரு பிடி மண்ணில் 45 சதவீதம் கனிம பொருள், 25 சதவீதம் காற்று, 5 சதவீதம் நுண்ணுயிர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் இயற்கை உரங்களான மண்புழு உரம், மக்கிய ஊட்டமேற்றிய தொழு உரம், கம்போஸ்ட், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், வேம்பு, அசோலா நீலம் பசும்பாசி, உயிர் பூஞ்சாணக் கொல்லியாகிய டிரைக்கோடெர்மாவிரிடி போன்றவற்றையும், பசுந்தாள் உரம், தக்கைப்பூண்டு, ஆவாரை, புங்கம், ஆடாதோடா பூவரசு போன்றவற்றை பயன்படுத்துவதையும் அதிகரிக்க வேண்டும்.

தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக இயற்கை காய்கறி விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து மானியம் வழங்கி வருகிறது. ஆர்வமுள்ள இயற்கை காய்கறி விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.