இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, ஏப்.14 திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை மற்றும் வரகனேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, இரண்டு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின்பேரில் 24.01.23- ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தும், வழக்கின் எதிரியான ராஜேந்திரன் (எ) ராஜேஷ் (23) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் விசாரணையில், எதிரி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் மீது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே எதிரி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் என்பவர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் என்பவர் மீதான குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் அடைக்கப்பட்டார்.
மற்றும் ஒரு சம்பவம்: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு கடந்த 12 ஆம் தேதி இரவு காரைக்காலிருந்து கோவை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் பேருந்திலிருந்து இறங்கி, பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை சென்றுவிட்டு, மீண்டும் பேருந்தில் ஏற கணவருடன் நடத்து வந்த கொண்டிருந்தபோது, ஆசிரியை பின்னால் தொடர்ந்து வந்த ஒருவர் பள்ளி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிக்க முயன்றபோது, ஆசிரியை சத்தம் போடவே அருகில் இருந்து பொதுமக்கள் மற்றும் பணியில் இருந்த கண்டோன்மெண்ட் காவல்நிலைய தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர்கள் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடிய நித்தியானந்தன் (39) என்பவரை கையும் களவுமாக பிடித்தும், அவர்மீது கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், எதிரியிமிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்