ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி; காப்பாற்றியும் பலன் இல்லை
திருச்சி கல்லணை ரோட்டில் திம்மராயசமுத்திரம் பகுதியில் தங்கையன் கோவில் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக்கண்ட அந்த பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர். அப்போது அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அதற்குள் அவர் மூச்சுத் திணறல் அதிகமாகி பலியானார்.
உடனே இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, அந்த மூதாட்டி யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர்?. காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து வரப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.