பாசன வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள்…
மாடக்குடி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விவசாய நிலத்திற்கு செல்லும் பாசன வாய்க்காலில் கொட்டிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஆணுறைகள்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சியிலிருந்து சிதம்பரம் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாடக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் பாசன வாய்க்காலில் ஆயிரக்கணக்கான காலாவதியாகாத ஆணுறைகள் தண்ணீரில் வீசப்பட்டு மிதக்கின்றன. அந்த ஆணுறைகளில் அரசு முத்திரை பொறிக்கப்பட்டிருப்பதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
பல ஆயிரம் மதிப்புடைய ஆணுறைகள் வீணாக தண்ணீரில் வீசி செல்லப் பட்டுள்ளது. இதில், 40 சதவிகித ஆணுறைகள் அடுத்து ஆண்டு 10 / 2024 காலாவதியாக கூடியவை, மற்ற 60 சத விகித ஆணுறைகள் அனைத்தும் 2026 ஆம் ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய காலாவதியாகாத ஆணுறைகள் ஆகும். இங்கு எப்படி இவ்வளவு ஆணுறைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.
மருத்துவ கழிவுகள் மற்றும் மருந்து மாத்திரைகள் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் முறைப்படி அப்புறப்படுத்தப் பட வேண்டும் என்ற விதிகள் இருக்க, இவையனைத்தும் சாலையோரம் வீசி சென்றவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விவசாய நிலத்தில் பாசனத்திற்காக செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவமனையில் வழங்கும் ஆணுறையானது எப்படி விவசாய நிலத்துக்கு செல்லும் வாய்க்காலில் எப்படி வந்தது. அரசு மருத்துவமனையில் இருந்து வந்ததா அல்லது தொண்டு நிறுவனத்திடமிருந்து வந்ததா ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்ததா என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுகின்றனர்.
கருத்தடை உறை என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் கருத்தடை உறைகள் பயன்படுகின்றன. இப்படி இருக்கையில் பயன்படுத்தக்கூடிய ஆணுறைகளை எதற்காக கொட்டிச் சென்றனர் என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.