சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் : மாநகர காவல் ஆணையர்

0 323
Stalin trichy visit

திருச்சி மாநகரில் சாலை விதிகளை மதிக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வை ஏற்படுத்த திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துறையில் சார்பில் தலை கவசத்துடன் கூடிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் காவலர்கள் கல்லூரி மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் திருச்சி புனித வளனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

மேலும் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் வந்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை பாராட்டி மாநகர காவல் துறை ஆணையர் மரக்கன்றுகளை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம், தில்லை நகர், மாரிஸ் திரையரங்கு பாலம் வழியாக கடந்து வந்து மீண்டும் புனித வளனார் கல்லூரியை வந்தடைந்தது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர்கள் ஜோசப் நிக்சன், சுந்தரமூர்த்தி மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

பேரணியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆணையர் சத்யபிரியா

திருச்சி மாநகரத்தில் வாகன விபத்தை குறைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

அனுமதி இன்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
கூடுதல் எண்ணிக்கையிலான போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுவது குறித்த புகார்கள் தொடர்ந்து வருவதால் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பில்லை என்றார்.

திருச்சி மாநகரத்தில் சாலையோரம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன்
கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதேபோல் போக்குவரத்து சிக்னல்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பதும், கார் கண்ணாடிகளை சோப்பு நீர் கொண்டு அனுமதியின்றி சுத்தம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

முன்னதாக, தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன மரக்கன்றுகளை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.