திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் களவழகன்-சகுந்தலா தம்பதியரின் மகள் காவியா (வயது 22). சகுந்தலாவின் சகோதரரான ராமச்சந்திரன் என்பவருக்கு காவியாவை கடந்த 2019-ம் வருடம் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி அதே பகுதியில் உள்ள பூலோகநாதர் கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அன்றிலிருந்து கணவன், மனைவி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இருந்தாலும் திருமணமாகி 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு வந்த காவியா மீண்டும் மாலை கணவர்
வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் இரவு சகுந்தலா தனது மகள் காவியா வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டு விட்டு காவியா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி வழக்குப்பதிவு செய்து இறந்துபோன காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் பாரதிதாசன், திருச்சி ஆர்டிஓ ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறனர்.