கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இழந்த ஏழைகளின் பசியாற்றும் பணியில் திருச்சி ஆசிரியை புஷ்பலதா

0 689
Stalin trichy visit

காலம் மாறிப்போச்சு, உதவி செய்வார் யாருமில்லை என்று சிலர் அங்கலாய்ப்பதை பார்த்திருக்கிறோம்.காலமும் மாறவில்லை, உதவி செய்வதற்கும் மனிதநேயமுள்ள மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும் வகையில் தான் இந்த கொரோனா தொற்று மனித குலத்தை தாக்கியதோ என்னவோ தெரியவில்லை?கொரோனா பேரிடர், ஊரடங்கால் வேலை வாய்ப்பிழந்து உணவிற்கே கஷ்டப்பட்டவர்களின் பசியாற்ற தாயுள்ளம் கொண்ட பலர் தன்னெழுச்சியாய் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருட்தந்தை இளந்தளிர் சூசை அலங்காரம் அவர்கள் தினமும் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.தினமும் வகை வகையான உணவு தயாரித்து அதற்கு தேவையான சத்துள்ள கூட்டும் சேர்த்து வழங்கி வருகிறார்.எடமலைப்பட்டிபுதூரில் தயாரிக்கப்படும் உணவை பொட்டலம் போட்டு அதை பசித்தவர்களை தேடித்தேடிச் சென்று வழங்குகிறார் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை புஷ்பலதா.தினமும் 5, 6 பகுதிகளை தேர்வு செய்து ஆசிரியை புஷ்பலதாவே நேரடியாக சென்று உணவு வழங்கியபோது அவரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.ஏழைகளின் பசியாற்றுகிறாரே இவரை விட்டுவிடலாம் என்று கொடிய கொரோனாவிற்கு தெரியவா போகிறது?ஆசிரியை புஷ்பலதாவை தொடர்ந்து அவரது கணவருக்கும் தொற்று ஏற்பட்டது.சிகிச்சைக்காக தம்பதியர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையிலும் ஆசிரியை புஷபலதா உணவு வழங்கும் பணியை வேறு நபர்கள் மூலம் தடையின்றி நடத்தினார்.உணவு தயாரிக்கின்ற நிலையிலிருந்து அது தேவையானவர்களுக்கு சென்றடையும் வரையில் ஆசிரியை அந்த பணியில் உள்ளவர்களை அலைபேசி மூலம் இயக்கிக்கொண்டே இருந்தார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது தான் கொரோனா முன்கள பணியாளர்களின் தியாகம், துணிச்சல், அர்ப்பணிப்பு பணிகளை நேரடியாக கண்டார்.முன்கள பணியாளர்களுக்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று தனது எண்ணத்தில் உதித்த நற்செயலை கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆசிரியை புஷ்பலதா செய்து வருகிறார்.அதன்படி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்கள பணியாளர்கள் 100 பேருக்கு தினமும் காலை சிற்றுண்டி தனது சொந்த பொறுப்பில் வழங்கி வருகிறார் ஆசிரியை புஷ்பலதா.இதற்காக திருச்சியிலுள்ள ஒரு சிறந்த ஓட்டலிலிருந்து தரமான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.அதேநேரத்தில் அருட்தந்தை இளந்தளிர் சூசை அலங்காரம் அவர்கள் ஏற்பாட்டில் நடந்து வரும் மதிய உணவு வழங்கும் பணியையும் கண்காணித்து வருகிறார். ஒன்றிய பள்ளி ஆசிரியையின் இந்த பேரிடர் கால பசியாற்றும் உன்னத பணியை அறிந்து அவரிடம் பேசினோம் இதோ அவரது தூய பணிகள் குறித்து விவரிக்கிறார்.வறுமையை விட கொடுமை என்னவென்றால் அது வறுமை தான் என்கிறார் வள்ளுவர்.அதிலும் வறுமை என்பது அடுத்த வேளை உணவிற்கே வழியில்லை என்பது மிகக் கொடுமையானது.பசியின் கொடுமையை அறிந்தவர்களுக்கு தான் பசியினால் ஏற்படும் விளைவுகள் தெரியும். நானும் பசியின் கொடுமையை அறிந்தவள்.பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பது இறைவனுக்கு கொடுத்ததற்கு சமம் என்று விவிலியம் சொல்கிறது. நமது முதல்வர் அவர்களும் தமிழகத்தில் யாரும் பசித்திருக்க கூடாது எனபதே தமது கொள்கை என்று கூறியிருக்கிறார்.அதன்படி அருட்தந்தை இளந்தளிர் சூசை அலங்காரம் அவர்கள் மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார். அந்த உணவு பொட்டலங்களை நான் நேரடியாக பசித்தோரை தேடித்தேடிச் சென்று வழங்கினேன்.உணவு பொட்டலங்களை வாங்கிய மக்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை பார்த்து எனக்குள் திருப்தி ஏற்படும். எனவே தான் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்கள் 100 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கினேன்.இது குறித்து முகநூலில் வெளியிட்டேன்.என்னோடு பணியாற்றும் சக ஆசிரியர்கள், நட்பு வட்டாரத்தினர் தாமாக முன்வந்து நாங்களும் இந்த திட்டத்திற்கு உதவுகிறோம் என நிதயுதவி அளித்தனர்.இது குறித்து நான் தொடர்ந்து முகநூலில் பதிவிட்டதால் வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து உதவிகள் வந்துள்ளது.காலை சிற்றுண்டி சப்ளை செய்யும் ஓட்டலின் வங்கி கணக்கிற்கே பணம் வந்து விடுகிறது.இன்னும் ஒரு வாரத்திற்கு தேவையான நிதி கைவசம் இருக்கிறது. இன்னும் நிதியுதவி வரும் என்று நம்புகிறேன்.யாரிடமும் நான் உதவி செய்யுங்கள் என கேட்கவில்லை. தாயுள்ளத்தோடு தருகிறார்கள்.இது தவிர அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா நோயாளிகள் 90 பேருக்கு புதிய போர்வைகளும் வழங்கியிருக்கிறோம்.லாக் டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை தொய்வின்றி உணவு வழங்குவோம்.ஶ்ரீரங்கம், திருவானைக்காவல் பாலம், மன்னார்புரம் ரவுண்டானா, பாலக்கரை, எடமலைப்பட்டிபுதூர் காலனி என தேவையுள்ள பகுதிகளை அறிந்து உணவு வழங்குகிறோம்.என்னுடைய முகநூல் கணக்கு என் மாணவர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டது. அதன்மூலம் ஏழைகளுக்கு உதவும் இந்த காரியத்தை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.கொடிய கொரோனா தொற்று நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளபோதிலும் மனிதநேயம் இன்னும் வாழ்கிறது. தேவையுள்ளோரை நோக்கி உதவிக்கரங்கள் நீள்கிறது என்பதையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது என்பது ஆறுதலான விஷயம் தான் என்கிறார் ஆசிரியை புஷ்பலதா.

 

Leave A Reply

Your email address will not be published.