போலீசுக்கு போக்கு காட்டிய மணல் திருடன் கைது
லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர்சீலி கிராமத்தை சேர்ந்தவர் செபாஸ்டியான்(38). பெரியவர்சீலி ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆட்டோ, பைக் மூலம் இரவில் தொடர் மணல் திருட்டில் செபாஸ்டியான் ஈடுபட்டு வந்தார்.பல வருடங்களாக கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடி வந்த செபாஸ்டியானை பிடிப்பது போலீசாருக்கு மிகுந்த சவாலாக இருந்து வந்தது. கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட போது, பலமுறை அவனை ஆற்றில் போலீசார் சுற்றி வளைத்து போது, போலீசாரை செபாஸ்டியான் தள்ளி விட்டு தப்பியோடி விடுவது வழக்கம். இந்நிலையில் லால்குடி எஸ்ஐ செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் செபாஸ்டியான் ஆட்டோவில் மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் செபாஸ்டியானை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.