திருச்சி காஜாமலை அய்யனார் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 37). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக முருகன் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற பொன்மலை பகுதியை சேர்ந்த பிரபு(வயது 23), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சாகுல் மீரான் (வயது 22) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.