திருச்சியில் போதை மருந்துகளை விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை ரோடு பகுதியில் கடந்த 12ம் தேதி உறையூர் பகுதியை சேர்ந்த சக்திதாசன், மனைவி ருத்ராதேவி பெயரில் ஸ்ரீபார்மஸி என்ற மொத்த மருந்து விநியோகம் செய்யும் உரிமம் எடுத்து அந்த உரிமத்தை வைத்து கள்ளத்தனமாக திருப்பூரில் உள்ள மருந்து கடை மூலமாக உறையூர் பகுதியை சேர்ந்த குமார், வரகனேரி பகுதியை சேர்ந்த ராம்நாத்(31), தென்னூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார்,(24) உறையூர் பாலாஜி(20), காந்தி மார்க்கெட் பிரகாஷ்(26) மற்றும் உறையூர் குமார் (எ) குமரேசன் (24) உறையூர், திருச்சி ஆகிய ஆறு சேர்ந்துகொண்டு மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்தது.

எனவே, சக்திதாசன் உள்ளிட்ட எதிரிகள் ஏழு நபர்களையும் கைது செய்து கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சக்திதாசனின் மொத்த உரிம சான்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.1,50,000/- போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள், ஊசிகள், ரூ.50,000/- மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா, அவர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் 6 செல்போன்களும் கைப்பற்றப்பட்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சக்திதாசன், குமார் மற்றும் ராம்நாத் ஆகிய மூவரும் தொடர்ந்து இதுபோன்று மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்யும் குற்றச்செயலில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், 3 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த பரிந்துரையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.
அதன்படி மூவருக்கும் மருந்து சரக்கு குற்றவாளிகள் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.