காதல் திருமணம் செய்தவர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( 25 ) இவர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா ( 19 ) என்ற பெண்ணை 11. 6 2023 அன்று காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இந்தப் பெண் இவருக்கு தங்கை முறை என கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டுப்புத்தூர் காவல் நிலைய வழக்கு சம்பந்தமாக தொட்டியம் ஜேஎம் கோர்ட்டுக்கு கடந்த 21ம் தேதி வந்துள்ளார். கோர்ட்டுக்கு வந்த வேலை முடிந்து திரும்பிய வரை மனைவியின் உறவினர்கள் காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்
கொண்டுவந்தனர்.
தீவிர புலன் விசாரணையில் வழக்கு தொடர்பாக கரூர் மாவட்டம்
ஆர் புதுக்கோட்டை சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் மாவட்டம் கோயம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (29) அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய நான்கு பேரையும் தொட்டியம் போலீசார்
கைது செய்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை கண்டுபிடிப்பதற்காக போலீசார் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவின் பேரில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்பட்ட இரு பெண்கள் உட்பட நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணமூர்த்தி தொட்டியம் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு திரும்பிய போது கார் டிரைவர் சரவணன் என்பவர் உதவியுடன் கடத்தபட்ட கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கோபிகாவின் அண்ணன் கரூர் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த ரவிவர்மன் (22), இவரின் தாய் ஹேமலதா (37), கரூரை சேர்ந்த பாட்டி பாப்பாத்தி (57),ரவிவர்மனின் நண்பர் வீரராக்கியத்தை சேர்ந்த தினேஷ் (33) ஆகியோர் சேர்ந்து காரில் கிருஷ்ணமூர்த்தியை கடத்திச் சென்றதாகவும் மாயனூர் அருகே காரிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்து சடலத்தை கல்லணை அருகே காவிரி ஆற்றில் வீசி சென்றதாகவும் தெரிவித்ததாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் கிருஷ்ணமூர்த்தி யின் சடலத்தை தேடினர். சடலம் கிடைக்கவில்லை
அடையாளம் காணப்படாத சடலம் கிடைத்தால் தகவல் தெரிவிக்கும்படி பிற காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொட்டியம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த சம்பவத்தினால் ஏற்பட்ட விரோதம் காரணமாக நீதிமன்றத்திற்கு வந்து திரும்பிய வாலிபரை கடத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.