திருச்சி மாநகராட்சியில் வெற்றி பெற்ற 65 பேரும் 2-ந் தேதி பதவி ஏற்பு!
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் 59 வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் திருச்சி மாநகராட்சியை தி.மு.க.
கைப்பற்றியது. அ.தி.மு.க.-3, சுயேச்சை-2, அ.ம.மு.க.-1 வார்டுகளில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 65 பேரும் வருகிற 2-ந் தேதி பதவி ஏற்கிறார்கள். மார்ச் 4-ந் தேதி மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் கவுன்சிலர்கள் மறைமுக ஓட்டெடுப்பின் மூலம் மேயர், துணை மேயரை தேர்வு செய்கிறார்கள்.
இந்தநிலையில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா வருகிற 2-ந் தேதி காலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றிச்சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் பதவி ஏற்பு விழாவுக்கான அழைப்பு கடிதம்
கொடுக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவுக்கு வரும்போது வெற்றி பெற்றதற்கான சான்றுடன், அழைப்பு கடிதமும் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.