ரூ.83 ஆயிரம் கடனுக்கு ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டல்; நிதிநிறுவனம் மீது பார்வையற்ற பெண் புகார்

0 337
Stalin trichy visit

திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறையை சேர்ந்த சுரேஷ் மனைவி சத்யபாமா. பார்வையற்றவரான இவர், திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வண்டியில் கிளீனராக வேலை பார்த்து வந்த போது 2019ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பலரிடம்கடன் வாங்கி கணவருக்கு அறுவை சிகிச்சை செய்தேன்.

கடனை அடைக்க முடியாததால் எனக்கு தெரிந்த உறையூரை சேர்ந்த சசி என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தரும்படி கேட்டேன். அவர், மருந்து கடை நடத்தும் வில்சன் என்பவரின் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தந்தார். இந்த பணத்துக்கு வாரந் தோறும் வட்டி கொடுக்க வேண்டும். மேலும் கணவர், அவரது தம்பி மற்றும் மாமியார் பெயரில் கோப்பு கிராமத்தில் உள்ள 39.50 சென்ட் இடத்தை வில்சனின் மகன் ராபின் சன் பெயருக்கு பவர் எழுதி தர வேண்டும் என்று பல பேப்பரில் எங்களிடம் கையெழுத்து பெற்றனர். பணத்தை திருப்பி கொடுத்ததும் அனைத்து ஆவணங்களையும் திரும்ப தருவதாக கூறினர்.

அதன்படி கடந்த 2020 டிசம்பர் 9ம் தேதி மருத்தாண்டகுறிச்சி பத்திரப்பதிவு அலு வலகத்துக்கு வரவழைத்து வெளியில் வைத்தே எங்களிடம் சில ஆவணங்க ளில் கையெழுத்து பெற்றுக்கொண்டு சசி மூலம் ரூ.83,000 கொடுத்தனர். தொடர்ந்து 20 வாரம் ரூ.10 ஆயிரம் வீதம் இது வரை ரூ.2 லட்சம் வரை கட்டியுள்ளோம். கடந்த டிசம்பர் 14 ம் தேதி மருந்து கடைக்கே நேரில் சென்று ரூ.40 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் இதுவரை அவர்கள் பவர் நகலை எங்களுக்கு தரவில்லை. இது பற்றி கேட்டபோது முழு பணத்தையும் கட்டினால் தருவோம் என்றனர்.

மீதி பணத்தை தருவதாக கூறியபோது தந்தையும், மகனும் ரூ.12 லட்சம் பாக்கி தர வேண்டும். இல்லை என்றால் இடத்தை தர முடியாது என்று கொலை மிரட்டல் விடுக்கின்றனர். கந்து வட்டி கேட்டு மிரட்டும் வில்சன், ராபின்சன் மற்றும் இதற்கு உடந்தையாக இருக்கும் வைரவலெட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.