திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா கடந்த 21-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் மாலை 6.15 மணிக்கு தாயார் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வீதியுலா வந்து இரவு 8.45 மணிக்கு மீண்டும் மூலஸ்தானத்தை அடைந்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு ஆகிறார். இரவு 7 மணி முதல் 8 மணிவரை தெப்பம் உற்சவம் கண்டருளுகிறார். தொடர்ந்து பல்லக்கில் திருவீதி உலா வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருமஞ்சனம் கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு பல்லக்கில் வீதியுலா வந்து மூலஸ்தானம் அடையும் நிகழ்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கமலவல்லி நாச்சியாரின் அருளை பெறலாம்.