நெல் அறுவடைக்கு பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்….!

0 424
Stalin trichy visit

திருச்சி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வயல் தரம் தேறிய விதைப்பண்ணைகளில் எந்திர அறுவடை செய்யும் போது பிற ரகக்கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க அறுவடைக்கு முன்பாக நெல் அறுவடை எந்திரத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு எந்திரத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் முதல் இரண்டு அல்லது மூன்று மூட்டையளவு விதைகளை தவிர்த்து விட்டு மீதமுள்ள விதைகளை விதைக்காக எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது. இதன் மூலம் எயந்திர அறுவடையால் ஏற்படும் பிற ரககலப்பு தவிர்க்கப்படுகிறது.

அறுவடைக்கு பின்பு உடனடியாக காய வைக்கும் செயல்முறை மிகவும் முக்கியமானதாகும். இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நெல் விதைகளில் பூஞ்சாண வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது மற்றும் நெல் விதைகளின் நிறம் மாறுவதோடு முளைப்புத் திறனும் பாதிக்கப்படக் கூடும். நெல் விதைகளைக் காயவைக்கும் உலர்களத்தை முதலில் நன்கு சுத்தம் செய்வது அவசியமான ஒன்றாகும். பின்னர் 2 முதல் 4 செ.மீ. உயரத்திற்கு மெல்லிய அடுக்குகளாக வயல் மட்ட நெல் விதைகளை களத்தில் பரப்பி மிதமான வெயிலில் காய வைத்து படிப்படியாக ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வயல்மட்ட நெல் விதைகளை கிளறிவிடுவதால் சீரான முறையில் ஈரப்பதம் குறைக்கப்படுகிறது.

இதன் மூலம் நெல் விதைகளின் முளைப்புத் திறன் பாதுகாக்கப்படும். நன்கு காய வைக்கப்பட்டு 13 சதவீதத்திற்கு கீழ் ஈரப்பதம் உடைய வயல் மட்ட நெல் விதைகளை புதிய கோணிப்பைகளில் பிடித்து விதைச்சான்று எண், பயிர், ரகம், சான்றளிப்பு நிலை போன்ற விவரங்களை எழுதி சணல் கொண்டு தைத்து ஈயக் குண்டு கோர்த்து சுத்தி அறிக்கை பெற ஸ்பெக்ஸ் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட விதைச்சான்று அலுவலர் உங்கள் விதைக்குவியலை ஆய்வு செய்து முத்திரை இட்டு நீங்கள் விரும்பும் அங்கீகாரம் பெற்ற விதைச்சுத்தி நிலையத்திற்கு எடுத்துச்செல்ல சுத்தி அறிக்கை வழங்குவார்.
விதைச்சுத்தி நிலையத்தில் தொடர் சான்றுப் பணி மேற்கொள்ளப்படும். மேற்கண்ட வழிமுறைகளை விதைப்பண்ணை விவசாயிகளும், விதை உற்பத்தியாளர்களும் முறையாக கடைபிடித்து தரமான விதை உற்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.