மதுபானம், கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு
மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அலுவலர்கள், மதுவிலக்கு பிரிவு காவல்துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு தன்னை சார்ந்த குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். மதுவின் தீமைகள் குறித்து மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்துதல், ஏற்கனவே கள்ளச்சாராயம் வியாபாரம் செய்து தண்டனை பெற்று பின்னர் மனம் திருந்திய நபர்கள் வாழ்க்கை நடத்திட நபர் ஒருவருக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை வைத்தல், ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்குதல் போன்றவை குறித்து கூறினார்.
இதில் உதவி ஆணையர்(கலால்) ராமன், போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு, கோட்ட கலால் அலுவலர்கள் பிரகாஷ், சத்தியநாராயணன், அலுவலக மேலாளர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே முடிவடைந்தது.