திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி-விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட கலெக்டர் சிவராசு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், “2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வருகிற 3-ந் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) நடைபெறும்.
தமிழ்நாட்டில் ஜவுளித்துறையில் புகழ்பெற்ற கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பருத்தி சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோரகாட்டன் சேலைகள், பெட்ஷீட்டுகள் மற்றும் துண்டு ரகங்கள் என ரூ.50 லட்சம் மதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 20-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜவுளி ரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசினால் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில் திருச்சி சரக கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.