சிறுவன் கடத்தல் வழக்கு திருச்சியில் 2 பேர் மீது குண்டர் சட்டம்!
திருச்சி மாநகரம், பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணேசாபுரம் புதுத்தெருவில் உள்ள சிக்கன் கடையில் 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கடந்த 10ம் தேதி சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பணத்திற்காக தனது மகனை திருச்சி பொன்மலை கணேசாபுரத்தை சேர்ந்த பிரபு(33), சோனி (எ) பாரத்(23), செந்தில்குமார்(37) மற்றும் ஒருவர் கடத்தி சென்றதாக சிறுவனின் தந்தை ரமேஷ்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் பொன்மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்களது மேற்பார்வையில் பொன்மலை காவல் ஆய்வாளர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அன்றைய தினமே 1 முதல் 3 பேரை கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் மூவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கொடூர ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவு இளம்பிழையாளி கண்டறியப்பட்டு கடந்த 26ம் தேதி சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபு, மீது பொன்மலை, அரியமங்கலம் மற்றும் நிரவி (பாண்டிச்சேரி) ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பிரபு மற்றும் சோனி (எ) பாரத் ஆகிய இருவரும் தொடர்ந்து இதுபோன்று ஆட்கடத்தல், கொலை மிரட்டல், கொலை மற்றும் பொதுமக்களின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், இவர்களது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு மேற்படி 2 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த பரிந்துரையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதன்படி மேற்படி இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.