பள்ளி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : பா.ஜ.க.பிரமுகர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார்
திருச்சி, நவ.2 திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வரும் ஆர்த்தி என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாது, நான் சண்முகா நகர், 3 ஆ-வது குறுக்குசாலையில் அரசு அனுமதி பெற்று ஏபிசி மாண்டிச்சேரி பள்ளியை நடத்தி வந்தேன். எனது உடல்நிலை சரியில்லாததால் எனது நண்பரின் உறவினரும், பா.ஜ.க. ஓ.பி.சி அணி மாநில செயலாளரின் மனைவியுமான அத்தினா சூர்யா என்பவரிடம் பள்ளியை பார்த்துக்கொள்ளும்படி வாடகை ஒப்பந்தப்பத்திரம் போட்டு ஒப்படைத்தேன். மேலும் பள்ளியின் அனுமதி முடிந்து ஓர் ஆண்டு காலம் ஆன நிலையிலும், வாடகை ஒப்பந்தப்பத்திரம் கெடு முடிந்தும் பள்ளியின் கட்டிடம் 30 ஆண்டுகள் கடந்து பழுதான நிலையிலும் சிறு குழந்தைகளின் உயிர்களை துட்சமாக மதித்து பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது எனது பெயரில் தான் வரும். எனவே காலிசெய்யுங்கள் என்று கேட்டும் கடந்த 6 மாதக்காலம் வாடகை தராமல் அத்தினா, அவரது கணவர் பா.ஜ.க. ஓ.பி.சி அணி மாநில செயலாளர் சூர்யாசிவா வைத்து எங்களை மிரட்டுகிறார். இனிமேல் இந்த வீடு உனக்கு கிடையாது. வாடகையும் கிடையாது. வீட்டை விட்டுவிட்டு ஓடி விடு. நான் ரவுடி உன்னையும், உன் குடும்பத்தையும் அழித்துவிடுவேன். நான் பா.ஜ.க. கட்சியில் மாநில பொறுப்பில் இருக்கிறேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சூர்யாசிவா எங்களை மிரட்டுகிறார். மேலும் எங்கள் மீதே காவல்துறையில் பொய் வழக்கு கொடுத்துள்ளார். வீட்டை அபகரிக்கும் எண்ணத்துடன் செயல்படும் -சூர்யாசிவாவிடம் இருந்து எங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கும்படியும், எனது வீட்டை மீட்டுத்தரும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.