தனியார் பேருந்து மோதி ஓட்டுநர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் நடந்து சென்ற தனியார் கல்லூரி பேருந்து டிரைவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
கல்லக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(59). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று சமத்துவபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்தை எடுப்பதற்காக வீட்டிலிருந்து திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து டிரைவர் பிச்சை (34) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.