திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் இந்திராநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(வயது48) இவர்களுக்கு காயத்ரி (வயது 23) என்ற மகளும், முத்துக்குமார் (வயது 20) என்ற மகனும் உள்ளனர். மகள் காயத்ரிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அரசலூர் அருகே உள்ள கீழக்காரைக்காட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் வாசுதேவன் காயத்ரி தம்பதியர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காயத்ரி பாலசமுத்திரத்திலுள்ள தனது தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வாசுதேவன் தனது மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியை வெளியே வருமாறு தெருவில் நின்று தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். வெளியே வந்த மாமியார் மகேஸ்வரி ஏன் இப்படி தெருவில் நின்று சத்தம் போடுகிறீர்கள் என கேட்டதற்கு அருகில் கிடந்த குச்சியை எடுத்து மகேஸ்வரியை தலையிலும் முதுகிலும் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை தடுக்க வந்த அவரது மனைவி காயத்ரியையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து மகேஸ்வரி தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.