தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்த குருசாமி வலியுறுத்தல்

0 301
Stalin trichy visit

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மதுரை போஸ், ஆத்தூர் சங்கரையா, புதுக்கோட்டை தனபதி, ராஜசேகரன், வயலூர் ராஜேந்திரன் செய்தி தொடர்பாளர் வீரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் குருசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை மேம்படுத்த கோதாவரி-காவிரி இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வருகிற 26 மற்றும் 27-ந்தேதி கோதாவரி-காவிரி இணைப்பு திட்ட மாநாடு எங்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

கோதாவரி-கல்லணை திட்டத்துக்கு பதிலாக கோதாவரி-காவிரி மாயனூர் திட்டத்தில் 83 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு தொழில் நுட்ப ரீதியில் சாத்தியமாகி உள்ளது. அதேநேரம் இந்த திட்டத்தை செயல்படுத்த இந்திய தேசிய அரசியல் மற்றும் பிற மாநில அரசுகள் சார்ந்த நிர்வாக நெருக்கடிகளை தமிழகம் சந்திக்க வேண்டியுள்ளது.
தெலுங்கான மாநில அரசு கோதாவரி நீரில் தங்களுக்கு உரிய முழுமையான பங்கினை பயன்படுத்திக்கொள்ள உத்தரவாதம் இன்றி இந்த திட்டத்தை ஏற்க மறுக்கிறது. ஆந்திர மாநிலம் ஏற்கனவே கிடப்பில் உள்ள கோதாவரி-கிருஷ்ணா இணைப்பு திட்டத்தை நிறைவு செய்து அதன் பலனை அடையவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. கர்நாடக அரசு இந்த திட்டத்தின் மூலம் அடையப்போகும் பலனை கணக்கிட்டு காத்துக்கிடக்கிறது.

சத்தீஸ்கார், ஒடிசா மாநிலங்களில் இருந்து உற்பத்தியாகும் கோதாவரி கிளை நதிகளான பிரனஹீதா, இந்திராவதி ஆகிய ஆறுகள் மூலம் அதிக நீர் கிடைப்பதால் இந்த இரு மாநிலத்தின் பங்கேற்பும் இந்த திட்டத்துக்கு அவசியம் ஆகிறது.
ஆனால் இரு மாநில அரசுகளையும் மத்திய அரசு ஏற்கனவே நடைபெற்ற ஆற்று நீர் பங்கீடு செயலர்கள் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மத்திய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறது. இதற்கு 90 சதவீதம் நிதி அளிக்க இருக்கிறது.

எனவே இந்த திட்டத்தை நிறைவேற்றவும், இந்த திட்டத்தின் அவசியம் குறித்து பேசவும், தமிழக அரசு தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்தவேண்டும். அத்துடன் ஐதராபாத்தில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகளை அனுப்பவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, இந்ததிட்டத்தின் அவசியம் குறித்து மாநாட்டில் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.