உயிரை கையில் பிடித்து கடக்கும் வாகன ஓட்டிகள் – கரூர் சாலைக்கு விடிவு காலம் பிறக்குமா?
திருச்சி கரூர் சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் அந்தநல்லூர் முதல் கொடியாலம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

அந்தநல்லூர் முதல் கொடியாலம் வரை சேதமடைந்த சாலையில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இருபுறமும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர்பலி வாங்கும் முன் சாலையை சீர் செய்ய வேண்டும் என சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.