கனமழை எதிரொலியால் திருச்சியில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு
திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சியிலிருந்து ஷார்ஜா துபாய் மஸ்கட் ஓமன் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவைகளும் சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் திருச்சி மாநகர் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது அந்த வகையில் திருச்சி விமான நிலையம் பகுதியில் அதிக கன மழை பெய்தது. இதனால் திருச்சியில் தரை இறங்க வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து திருச்சிக்கு மாலை 5.20 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதேபோன்று சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு மாலை 6.05 மணிக்கு தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு மாலை 6.05 மணிக்கு தரை இறங்க வேண்டிய இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் மேற்கண்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது விமான நிறுவனங்களின் சார்பில் மழையின் அளவு குறைந்தவுடன் திருச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.