குழந்தை தொழிலாளர் சீரமைப்பு திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிப்பு
கொரோனா தொற்று காரணமாக குழந்தை தொழிலாளர் சீரமைப்புத்திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படுவதால் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி மூலம் பிரத்யேகமாக சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்காக பயிற்சி வகுப்புகளை நடத்த முதல்-அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.
அதன்அடிப்படையில் தேசிய குழந்தை தொழிலாளர் சீரமைப்புத்திட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்றுவிக்கும் பொருட்டு கடந்த 1ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி வரை பள்ளிக்கல்வித்துறையினரால் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் 11.30 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 8 சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் 186 மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் மூலம் வீடுகளில் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த தகவலை தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் பியர்லின் தெரிவித்துள்ளார்.