நாகநல்லூர்- முத்தையம்பாளையம் மெயின்ரோட்டில் பேன்ஸி மற்றும் கவரிங் கடை நடத்தி வருபவர் சிலம்பரசன்(30). இவர் எப்போதும் காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்துவிட்டு இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு, அன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, இரும்பு கேட் கதவின் பூட்டும், பிரதான வாயில் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கிட்டங்கி கதவுகளும் திறந்து கிடந்த நிலையில், கல்லாப் பெட்டியிலிருந்த சில்லரைகள் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவலளித்தார். முதல் நாள் இரவு கல்லாவிலிருந்த தொகையை சிலம்பரசன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதால் அந்த தொகை தப்பியது.

இதேபோல் நாகநல்லூர் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த ஆனந்த்(40) லாரி டிரைவரான இவர் பணி நிமித்தம் காரணமாக வெளியே சென்றிருந்த நிலையில், ஆனந்தின் மனைவி ரமா(35), வீட்டின் முன் பக்க கதவையும் , பிரதான கதவையும் பூட்டி விட்டு மேலே மாடியிலுள்ள படுக்கையறையில் தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் இரண்டு கதவின் பூட்டுகளையும் உடைத்து, சமையலறையில் மணிபர்ஸில் வைத்திருந்த ரூ.11000 பணத்தை திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சியடைந்து, உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவலளித்தார்.
நாகநல்லூர் பெரியசாமி கோயில் சாலையில் வசித்து வரும் வெள்ளையம்மாள் (60), விதவை கூலித்தொழிலாளி. தனது கூரை வீட்டை பூட்டி விட்டு, அருகிலுள்ள தனது மாட்டுக்கொட்டகையில் ,காவலுக்காக படுக்க சென்றவர். காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ரூ.3000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பயிற்சி டிஎஸ்பி விக்னேஷ், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பெரியமணி, ஏட்டு தியானேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உப்பிலியபுரம் பகுதியில், இரவு நேரங்களில் நடைபெறும் தொடர் திருட்டுகளை கண்காணிக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.