திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.உடையாபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 43). இவர் குளித்தலை சாலையில் உள்ள தனியார் பஞ்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆலையில் இருந்து நேற்று முன்தினம் மணப்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது பஸ் நிலையம் ரவுண்டானா அருகே மினி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சக்தி வேல் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் இறந்தவரின் உறவினர்கள் இறந்தவருக்கு இழப்பீடு வழங்கிடக் கோரி மணப்பாறை – குளித்தலை சாலையில் சம்மந்தப்பட்ட ஆலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல் சம்மந்தப்பட்ட பஞ்சாலை நிறுவனத்தினரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். உடனடியாக இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுக்கான காசோலை வழங்கியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.