சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் தகவல்
திருச்சி மலைகோட்டை பகுதி, சத்திரம் பஸ்நிலைய பகுதி, மத்திய பஸ்நிலைய பகுதி, காந்திமார்க்கெட் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் சாலையோரங்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், காலணிகள், விளையாட்டு பொருட்கள், துணிகள், பொம்மைகள் என்று பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த சாலையோர வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதன் மூலம் பலர் கடன் பெற்று தொழிலை நடத்தி வந்தனர். மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு சாலையோரங்களில் அவர்கள் மீண்டும் தங்கள் வியாபாரங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இதுவரை சுமார் 1,750 பேர் சாலையோர அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கும், புதிய சாலையோர வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமானிடம் கேட்டபோது, இதில் திருச்சி மாநகராட்சியில் 1,750 சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தடைபட்டன. தற்போது 1,000 பேருக்கு அடையாள அட்டை வழங்க இருக்கிறோம். மேலும் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.10 ஆயிரம் கடனை பெற்று கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.