சாலையோரம் கிடந்த பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நாகநல்லூரிலிருந்து முத்தையம்பாளையம் செல்லும் வழியில் 100 நாள் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இளம்பெண் கீழே கிடந்த பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலத்தை சேர்ந்த சஞ்சீவி மூக்காயி தம்பதியினர் தனது மகளான சங்கீதா (வயது 21) உடன் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது உறவினர் வெங்கடேசன் மாற்றுத்திறனாளிக்கு திருமணம் செய்து வைக்க, பேச்சுவார்த்தைக்காக வைரிசெட்டிப்பாளையம் வந்துள்ளனர். வந்த இடத்தில், சற்று மனநலம் பாதிப்புக்குள்ளான சங்கீதா, தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.