மக்களைத்தேடி மருத்துவத்தால் 1 லட்சம் பேர் பயன்; முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் திருச்சி மக்கள்!

0 269
Stalin trichy visit

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் மூலமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் மொண்டியம்பட்டி கிராமத்தில் காணொலி காட்சி வாயிலாக 05.08.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் இத்திட்டமானது திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள மேலும் 13 வட்டாரங்களிலும் மற்றும் திருச்சி மாநகராட்சியில் உள்ள அபிஷேகபுரம் கோட்டத்தில் 15.09.2021 அன்று விரிவுபடுத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் உள்ள பொன்மலை, அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டங்களில் 06.10.2021 அன்று விரிவுபடுத்தப்பட்டது. துறையூர் மற்றும் மணப்பாறை நகராட்சிகளில் 09.12.2021 அன்று விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் 45 வயதுக்கு மேல் உள்ள சக்கரை வியாதி, உயர் இரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று நேரடியாக பெண் சுகாதார தன்னார்வளர்கள் மூலமாக இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்துப் பெட்டகத்தினை வழங்குகின்றார்கள். மேலும் வட்டாரத்தில் உள்ள பக்கவாதம், புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் கை கால் செயலிழந்து கிசிச்சை தேவைப்படும் நபர்களுக்கும் வீட்டிற்கே சென்று பிசியோதெரபி சிகிச்சைகள் மற்றும் நோய் ஆதரவு சிகிச்சைகள், வலி நிவாரண சிகிச்சைகளை மருத்துவக்குழு மேற்கொள்கின்றனர்.

மேலும் மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பு மருத்துவக்குழு வாகனம் மூலமாக வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிடோனியல் டையாலிஸ் சிகிச்சை பெறும் நபர்களுக்கு தேவைப்படும் பெரிடோனியல் டையாலிஸ் திரவ பாக்கெட்டுக்களை நோய் ஆதரவு சிகிச்சை வாகனம் மூலமாக வீட்டிற்கே சென்று வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சக்கரை வியாதி உள்ள 41612 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் உள்ள 30004 நபர்களும், சக்கரை வியாதி (ம) உயர் இரத்த அழுத்தமுள்ள 22890 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சையில் 5851 நபர்களும், இயன்முறை சிகிச்சைக்காக 6268 நபர்களும், பெரிடோனியல் டையாலிஸ் சிகிச்சைக்காக 6 நபர்களும் என 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் 398 பெண் சுகாதாரப் பணியாளர்கள், 80 செவிலியர்கள் மற்றும் 18 இயன்முறை சிகிச்சை நிபுனர்கள் உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்ற மண்ணச்சநல்லூர் வட்டம் எஸ்.கண்ணனூர் ராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தெரிவித்ததாவது:
எனது பெயர் லட்சுமி, நான் மண்ணச்சநல்லூர் வட்டம், எஸ்.கண்ணனூர் கிராமத்தில் வசதில் வருகிறேன். எனக்கு 48 வயசாச்சு, நான் சமயபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தேன்.

 

எனக்கு சர்க்கரை நோய் நீண்ட நாட்களாக உள்ள நிலையில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் போய் மாத்திரை வாங்குவேன், மாத்திரை வாங்குவதற்குப் போர அன்னைக்கு என்னால எந்த வேலைக்கும் போக முடியாது. போன வாரம் நர்ஸ் அம்மா எங்க வீட்டுக்கு வந்தாங்க வந்து பிரஷர், சுகர் செக் பண்ணிட்டு ரெண்டு மாசத்துக்கு வேணும்கற மாத்திரை கொடுத்தாங்க இனிமே நீங்க ஆஸ்பத்திரிக்கு வர தேவையில்லை மாண்புமிகு முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கொண்டு வந்திருக்காங்க அதனால நாங்களே வந்து உங்களுக்கு செக் பண்ணி மாத்திரை கொடுத்துடுவோம், நேர நேரத்துக்கு கரெக்டா மாத்திரை சாப்பிடுங்கன்னு சொன்னாங்க. ஏழை எளிய மக்கள் சிரமப்படக் கூடாது என்று இத்திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்ற மணப்பாறை வட்டம் மொண்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் முத்துலட்சுமி என்பவர் தெரிவிக்கையில், எனது பெயர் முத்துலட்சுமி எனக்கு 43 வயதாகிறது, நான் மணப்பாறை வட்டம் மொண்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன் உள்ளார். எனது கணவர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து என்னையும் என் குடும்பத்தையும் பார்த்து வருகிறார். பல வருடமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறேன். என்னால் வேகமாக நடக்க முடியாது. நான் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சக்கரை மாத்திரை பெற்று வருவேன். ரெண்டு மாசமா என்னால போக முடியல, இந்நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இருந்து ஒரு அம்மா எங்க வீட்டுக்கு வந்தாங்க, வந்து எனக்கு இரத்த டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு ரெண்டு மாசத்துக்கு வேணும்கற மாத்திரை கொடுத்துட்டு போனாங்க, வீட்டுக்கு வந்து மாத்திரை கொடுக்குறீங்களே என்ன வியம்னு கேட்டேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்கள் உங்கள மாதிரி சர்க்கரை வியாதி,

ரத்தக் கொதிப்பு இருக்கவங்களுக்கு வீட்டுக்கே வந்து டெஸ்ட் பண்ணி மாத்திரை கொடுக்கணும்னு சொல்லி திட்டம் கொண்டு வந்திருக்கிறார் என்று சொன்னாங்க, 100 நாள் வேலைக்கு கூட போக முடியாம சிரமப்பட்ட எனக்கு வீடு தேடி வந்து என்ன பரிசோதனை பண்ணிட்டு மாத்திரை குடுத்துட்டு போறாங்கள். இந்தத் திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் ஐயா அவர்கள் மகராசனா இருக்கணும் என்று நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.
இந்தியாவிற்கே முன்னோடியாக உயிர்காக்கும் “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை கொண்டுவந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்ற மக்கள் கோடான கோடி நன்றியை தெரிவித்து வாழ்த்துகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.