சமயபுரம் மாரியம்மன் கோயிக்லுகு பாதயாத்திரையாக சென்ற பெண் பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக சென்ற பெண் ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பரிதாபமாக பலியானார்.கள்ளக்குறிச்சி மாவட்டம்,திட்டக்குடி தாலுகா காரணூர் ஊராட்சி குதிரைசந்தல் கிராமத்தை சோ்ந்தவர் 28 வயதான வீரன். இவருடைய மனைவி 23 வயதான திவ்யா.திவ்யா சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து ஆண்டுதோறும் பாதயாத்திரையாக செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.அதே போல இந்த ஆண்டும் மாலை அணிந்து சக பக்தர்களோடு சமயபுரம் மாரியம்மன் கோயில் நோக்கிபாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தார். அப்போது தனது குழந்தைகளான 4 வயதான மகன் முத்தரசன்,2 வயதான மகள் கனிமொழி ஆகியோரை அழைத்துச் சென்றிருந்தார்.அதே போல பெரம்பலுார் மாவட்டம் ஆயக்குடி கிராமத்தை சோ்ந்த தமிழ்வேந்தன் சமயபுரம் கோவிலுக்கு அலங்கார ஊா்தி எடுத்து வந்துள்ளார்.திட்டக்குடி வழியாக சமயபுரம் நோக்கி பக்தர்கள் அனைவரும் வந்துகொண்டிருந்தனர். பக்தர்கள் முன்புறம் நடந்து செல்ல பின்னால் சரக்கு வாகனத்தில் சுவாமி மின் விளக்குகளால் அலங்கரித்து அதற்கு ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டு இழுத்து வரப்பட்டது.இந்நிலையில் நேற்று அதிகாலை லால்குடி அருகே கல்லகம் அருகே வந்த போது திவ்யா உடல் அசதியால் தனது மகள் கனிமொழியை தூக்கிக்கொண்டு சுவாமி வந்த சரக்கு வாகனத்தில் பின்புறம் ஏறி உட்கார்ந்து வந்துள்ளார். அப்போது திவ்யா கண் அயர்ந்து விடவே அவரது தலை முடி ஜெனரேட்டருக்குள் சிக்கியது. இதனால் அவர் அலறித் துடித்துள்ளார். ஒலிபெருக்கியின் சத்தத்தால் அவரின் அலறல் சத்தம் டிரைவரின் காதுகளில் விழவில்லை. சிறிது துாரம் சென்ற பின்னர் பாதயாத்திரை சென்றவர்கள் இதனை கண்டு வண்டியை நிறுத்தியுள்ளனர்.இதில் திவ்யாவிற்கு தலையில் படு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தஞ்சை மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுக்குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் திவ்யாவின் கணவர் வீரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் தமிழ்வேந்தனிடம் விசாரணை செய்து வருகின்றனா்.
